Sunday, November 21, 2010

சிறுவனுக்கு தெரிந்தது கூட கம்சனுக்கு தெரியலையே...!?

      சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நானும், என்னுடன் பணியாற்றிய மேலாளரும் ஒரு விடுமுறை தினத்தன்று அலுவலகத்திற்கு வரும்படி நேர்ந்தது. எங்களுடைய வேலையை முடித்துவிட்டு கிடைத்த ஓய்வு நேரத்தில் வாய்க்கு கிடைத்த விஷயங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் கூரிய விஷ்யம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

சில தினங்களுக்கு முன்னால் என் மேலாளர் தன் பக்கத்து வீட்டு சிறுவனின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருந்தாராம். அந்த சிறுவனின் சுட்டித்தனத்தை தாங்க முடியாத அவனின் தந்தை, அவனை அழைத்து ஓர் இடத்தில் அமைதியாக உட்கார சொல்லியிருக்கிறார். ஆனால் கதை சொன்னால் தான் ஓர் இடத்தில் உட்காருவேன் என்றிருக்கிறான் அந்த சிறுவன். எப்படியாவது அவனை உட்கார வைக்க அந்த தந்தை தொடங்கிய கதை "கிருஷ்ண புராணம்". கதையின் தொடக்கத்திலிருந்தே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் சிறுவன். தந்தையோ மகனின் ஆர்வத்தை பார்த்து கம்சன் செய்த அட்டகாச்ங்கள், கிருஷ்ணரின் தாய் தந்தை பட்ட கஷ்டங்கள் என்று உறுக்கமாக விவரிக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் தந்தையிடம் "அப்பா...கம்சன் யாரால் இறந்துபோவார்" என்று கேட்டான்.

மகன் கதையை மிகவும் ரசிப்பதாக நினைத்த தந்தை "கம்சனின் இறப்பு வசுதேவர், தேவகியின் எட்டாவது மகனால் நேரும்" என்றார். இதைக்கேட்ட மகன் சிரித்துக்கொண்டே தன் தந்தையிடம் "அப்பா, இந்த கம்சனுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை... அதான் வசுதேவர், தேவகியின் எட்டாவது மகனால் தன் சாவு நிச்சயம்னு தெரியுதுல்ல, அப்பறம் ஏன் ரெண்டு பேரையும் ஒரே ஜெயிலிலே போடனும்? இவரே தப்பு செஞ்சிட்டு அப்பறம் குழந்தை பிறந்துடுச்சினா எப்படி"னு கேட்டானே பார்க்கனும். தந்தைக்கு ஒன்னும் புரியவில்லை, எப்படி இந்த நிலமையை சமாளிப்பது என்று தெரியாமல் இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தைக்கேட்ட எனக்கு சிரிப்பையும் ஆச்சரியத்தையும் அடக்கமுடியவில்லை. அந்த சிறுவனின் அறிவு கூர்மையை பாராட்டுவதா? இல்லை நம் புராணத்தில் உள்ள ஓட்டையை சாடுவதா? இல்லை சிறுவனின் வயதுக்கு மீறிய பேச்சை கண்டிப்பதா? என்று தெரியவில்லை. ஆனால் புரியவேண்டயது புரிந்துவிட்டது எனக்கு... உங்களுக்கும் தானே?

-------------------------------------------------------------


Friday, November 19, 2010

சென்னை தமிழில் திருக்குறள்?

தமிழ் மொழி இனிமையானது என்பதில் இரண்டாம் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப தமிழின் உச்சரிப்பு மறுபடுகிறது. கொங்கு தமிழ், மதுரை தமிழ், சென்னை தமிழ், நெல்லை தமிழ் என கூறலாம். இவ்வள்வு தமிழ் இருக்க பண்டைய புலவர்கள் ஏன் சங்கத்தமிழில் மட்டும் பா இயற்ற வேண்டும்? அப்படியானால் புலவர்கள் இருந்த காலத்தில் மற்ற வகையான தமிழை அங்கீகரிக்கவில்லையோ? அல்லது புலவர்கள் மறைந்த பிறகு இவ்வகையான தமிழ் பிறந்திருக்குமோ?

 ஒரு நகைச்சுவைக்காக யோசித்த்து பார்த்தேன். திருவள்ளுவர் சென்னையில் உள்ள மைலாப்பூரில் பிறந்ததாக தழிழ் பாட நூலில் படித்துள்ளேன். இவர் திருக்குறளை சென்னை தமிழில் எழுதியிருந்தால்? அதே போல் கம்பன் திருச்சி வட்டார தமிழிலும், அகத்தியர் மதுரைத்தமிழிலும், இளங்கோவடிகள் நெல்லைத்தமிழிலும் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்க்ம்?

யோசித்து பார்க்கவே முடியவில்லை, தமிழ் பாட வகுப்பு... நல்ல நகைச்சுவை பாட வகுப்பாக மாறியிருக்கும்.

Thursday, November 18, 2010

சுத்தமாக வைத்திருக்க காசு.

பல வருடங்களுக்கு முன்னால் நானும் என் நெருங்கிய நண்பனும் பேருந்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிட்டது. சென்னையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த வண்டி மூன்று மணி நேர பயணத்திற்கு  பிறகு பேருந்து விழுப்புரத்திற்கும், விக்கிரவாண்டிக்கும் இடையே  வந்துகொண்டிருந்தது. உலக விஷயங்களை அளவளாவிக்கொண்டு வந்த என் நண்பன் திடீரென அமைதியானான். அவனைப்போலவே மற்ற பயணிகளும் நெளிய ஆரம்பித்தனர். பேருந்தில் நீண்ட நேரம் பயணித்ததால் எல்லோருக்கும் இயற்கையின் அழைப்பு வந்துவிட்டது.

என் நன்பன் உட்பட மற்ற பயணிகளிடம் இதை எப்படி நடத்துனரிடம் தெரிவிப்பது என்கிற கூச்சம் தெரிந்தது. இந்த மௌனமான போட்டியில் தோற்றுப்போன சக பயணி ஒருவர் நடத்துனரின் காதை கடிக்க பேருந்து நெடுச்சாலையின் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் நின்றது. மற்றவர்கள், இந்த பயணியை மனதார வாழ்த்தி விட்டு பேருந்தில் இருந்து அவசரமாக ஒதுக்குப்புரமான இடத்திற்கு ஒடிச்சென்றனர். நானும் என் இயற்கையின் அழைப்பை மதித்து ஆண்கள் கழிவறைக்கு சென்றேன், அங்கே யாரையும் கானாமல் திடுக்கிட்டேன்.

பிறகு, என் வேலை முடிந்ததும் கழிவறையின் வாசலில் இருந்த காப்பாளரிடம் சில்லரையை கொடுத்துவிட்டு பேருந்துக்கு வந்தேன். அதேபோல் மற்றவர்களும், என் நண்பனும் தங்கள் இயற்கை உபாதைகளை இறக்கி விடு வந்திருந்தனர். என் நண்பனிடம் இப்படி கண்ட இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிப்பது தவறு என்றும், கழிவறைகளை உபயோகிப்பது நம் சுற்றுசூழலை தூய்மையாக வைப்பதோடு அல்லாமல் நமக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றேன்.

இந்த கேள்வியை எதிர்பார்ததுபோல் புன்னகையுடன் தன் பதிலை தொடங்கினான்... "நீ சொல்வது போல் பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் தவறு தான், ஆனால் சட்டம் என்பது தவறு செய்பவனுக்கு தண்டனை தரவேண்டுமே தவிர அதை கடைப்பிடிப்பவனுக்கு தரப்பட இல்லை" என்றான். நான் ஏதும் புரியாமல் விழித்தேன், அவன் தொடர்ந்தான். "நீ இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு கழிவறையை உபயோகப்படுத்துகிறாய்..அப்படி என்றால் நீ சட்டத்தை மதிக்கிறாய் என்று பொருள், ஆனால் உன்னிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் தவறென்ராலும் யாரும் கட்டணம் வசூலிப்பதும் இல்லை, தண்டனை தருவதும் இல்லை. சட்டத்தை மதிக்கும் உனக்கு கழிவறையில் இலவச அனுமதி தானே தரவேண்டும். நாம் சுத்தமாக வைத்திருக்க ஏன் காசு கொடுக்கவேண்டும்" என்றான்.

அவன் சொன்னதில் உண்மை இருந்தாலும் சிறுநீரிலும் காசு பார்க்க நினைப்பவர்களிடம் நம் பேச்சு எடுபடாது. 'உனக்கு அவசரம் என்றால் காசு கொடுத்துவிட்டு போ' என்கிறார்களே தவிர, என் நண்பன் சொல்வது போல் காசு கொடுத்து உள்ளே சென்றாலும் அங்கேயும் சுத்தமாக இருப்பதில்லை. அன்றில் இருந்து வெளியூர் பயணத்தில் பேருந்து வழியில் சிறுநீர் கழிக்க வழியில் நின்றால் என் நண்பனின் ஞபகம் தான் எனக்கு வரும்.

Wednesday, November 17, 2010

யானைக்கும் அடி சறுக்கும்.

'யானைக்கும் அடி சறுக்கும்' - அதுபோல் பெரிய கவிஞர்களுக்கும் அடி சறுக்கும் போல.  மிக நீண்ட நாட்களகவே என் மனதை வாட்டும் ஒரு விஷயம் இது. மற்றபடி இந்த வரிகளை எழுதிய கவிஞர் மீதோ அவர் எழுதிய மற்ற பாடல்கள் மீதோ எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை.

'புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னாலே முடியாது தம்பி' - அண்ணமலை திரைப்படத்தில் வரும் இந்த வரிகளை முதன் முதலில் கேட்டதில் இருந்தே ஏனோ எனக்கு இந்த வரிகளுடன் உடன்பாடு இல்லை. கவிஞரின் நோக்கம் என்னவோ பசு மாட்டை பெருமை படுத்துவதக பாடல் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் எழுதி முடித்ததென்னவோ வேறுவிதமாக அமைந்தது.

மாட்டிற்கு புல் என்பதும், மனிதனுக்கு உணவு என்பதும் இயற்கையின் அமைப்பு. மாடு சாப்பிடுகிறதே என்று மனிதன் புல்லை தின்ன முடியுமா? முடிந்தால் மனிதனால் பால் தான் கொடுக்க முடியுமா? இந்த பாடல் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே எனக்கு புரியவில்லை.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. மாட்டிற்கு இருப்பது மனிதனிடம் இருக்காது, மனிதனிடம் இருப்பது கழுதையிடம் இருக்காது என்று மெத்தப்படித்தவருக்கு நான் சொல்ல முடியுமா? நான் என் மனசாட்சியோடு தானே பேசுகிறேன்... சரி பாடல் வந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது விட்டுத்தள்ளுங்கள்.

Tuesday, November 16, 2010

தமிழில் என் முதல் ப்ளாக்.

தமிழில் என் முதல் 'ப்ளாக்'கைப்பார்ததும் எனக்கே என்னைப்பற்றி சற்று திகைப்பாக இருந்தது. தமிழ் வழி கல்வி கற்றவன் அல்ல நான், எளிதாக தமிழில் தட்டச்சு அடிப்பதும் எனக்கு தெறியாது. தமிழ் மீது உள்ள பற்று தான் எல்லாம் என்னை செய்விக்கிறது. இதனால் தமிழ் மொழி பண்டிதர்கள் என் ப்ளாக்கில் உள்ள் பிழையை பொறுத்தருள்வீராக...!!!

இரண்டு சம்பவங்கள்.

சமீபத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் என் மனதை பாதித்தது. முதலாவது, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அவட்றில் அந்த தாய் ஆண் குழந்தையை உயிரோடு விட்டுவிட்டு, பெண் குழந்தையை கழிவறையின் ஜன்னல் வழியாக வெளியே வீசி கொன்று விட்டாள்.

இரண்டாவது, நேற்று மதுரையில் ஒரு பெண் தன்னுடைய இறந்த குழந்தையை புதைக்க காசு இல்லாமல் வைகை ஆற்றில் வீசி விட்டாள் என்பது தான்.

இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் நாட்டில் மனிதாபிமானமும், வறுமையும் குறையவில்லை என்று தான் தோன்றுகிறது.

எதற்க்காக இந்த ப்ளாக்.

எவ்வளவோ ப்ளாக் இருக்கயில் எதற்க்காக இந்த ப்ளாக் என்று நீங்கள் நினைக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கவோ, புகழவோ, அரசியல், சினிமா சார்புட்றதோ அல்ல. எது என் அன்றாட வாழ்வை பாதிக்குமோ, எதைப்பற்றி நான் என் மனதோடு பேசுகிறேனோ.. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.