பல வருடங்களுக்கு முன்னால் நானும் என் நெருங்கிய நண்பனும் பேருந்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிட்டது. சென்னையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த வண்டி மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு பேருந்து விழுப்புரத்திற்கும், விக்கிரவாண்டிக்கும் இடையே வந்துகொண்டிருந்தது. உலக விஷயங்களை அளவளாவிக்கொண்டு வந்த என் நண்பன் திடீரென அமைதியானான். அவனைப்போலவே மற்ற பயணிகளும் நெளிய ஆரம்பித்தனர். பேருந்தில் நீண்ட நேரம் பயணித்ததால் எல்லோருக்கும் இயற்கையின் அழைப்பு வந்துவிட்டது.
என் நன்பன் உட்பட மற்ற பயணிகளிடம் இதை எப்படி நடத்துனரிடம் தெரிவிப்பது என்கிற கூச்சம் தெரிந்தது. இந்த மௌனமான போட்டியில் தோற்றுப்போன சக பயணி ஒருவர் நடத்துனரின் காதை கடிக்க பேருந்து நெடுச்சாலையின் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் நின்றது. மற்றவர்கள், இந்த பயணியை மனதார வாழ்த்தி விட்டு பேருந்தில் இருந்து அவசரமாக ஒதுக்குப்புரமான இடத்திற்கு ஒடிச்சென்றனர். நானும் என் இயற்கையின் அழைப்பை மதித்து ஆண்கள் கழிவறைக்கு சென்றேன், அங்கே யாரையும் கானாமல் திடுக்கிட்டேன்.
பிறகு, என் வேலை முடிந்ததும் கழிவறையின் வாசலில் இருந்த காப்பாளரிடம் சில்லரையை கொடுத்துவிட்டு பேருந்துக்கு வந்தேன். அதேபோல் மற்றவர்களும், என் நண்பனும் தங்கள் இயற்கை உபாதைகளை இறக்கி விடு வந்திருந்தனர். என் நண்பனிடம் இப்படி கண்ட இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிப்பது தவறு என்றும், கழிவறைகளை உபயோகிப்பது நம் சுற்றுசூழலை தூய்மையாக வைப்பதோடு அல்லாமல் நமக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றேன்.
இந்த கேள்வியை எதிர்பார்ததுபோல் புன்னகையுடன் தன் பதிலை தொடங்கினான்... "நீ சொல்வது போல் பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் தவறு தான், ஆனால் சட்டம் என்பது தவறு செய்பவனுக்கு தண்டனை தரவேண்டுமே தவிர அதை கடைப்பிடிப்பவனுக்கு தரப்பட இல்லை" என்றான். நான் ஏதும் புரியாமல் விழித்தேன், அவன் தொடர்ந்தான். "நீ இடத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு கழிவறையை உபயோகப்படுத்துகிறாய்..அப்படி என்றால் நீ சட்டத்தை மதிக்கிறாய் என்று பொருள், ஆனால் உன்னிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் தவறென்ராலும் யாரும் கட்டணம் வசூலிப்பதும் இல்லை, தண்டனை தருவதும் இல்லை. சட்டத்தை மதிக்கும் உனக்கு கழிவறையில் இலவச அனுமதி தானே தரவேண்டும். நாம் சுத்தமாக வைத்திருக்க ஏன் காசு கொடுக்கவேண்டும்" என்றான்.
அவன் சொன்னதில் உண்மை இருந்தாலும் சிறுநீரிலும் காசு பார்க்க நினைப்பவர்களிடம் நம் பேச்சு எடுபடாது. 'உனக்கு அவசரம் என்றால் காசு கொடுத்துவிட்டு போ' என்கிறார்களே தவிர, என் நண்பன் சொல்வது போல் காசு கொடுத்து உள்ளே சென்றாலும் அங்கேயும் சுத்தமாக இருப்பதில்லை. அன்றில் இருந்து வெளியூர் பயணத்தில் பேருந்து வழியில் சிறுநீர் கழிக்க வழியில் நின்றால் என் நண்பனின் ஞபகம் தான் எனக்கு வரும்.
No comments:
Post a Comment