Sunday, November 21, 2010

சிறுவனுக்கு தெரிந்தது கூட கம்சனுக்கு தெரியலையே...!?

      சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நானும், என்னுடன் பணியாற்றிய மேலாளரும் ஒரு விடுமுறை தினத்தன்று அலுவலகத்திற்கு வரும்படி நேர்ந்தது. எங்களுடைய வேலையை முடித்துவிட்டு கிடைத்த ஓய்வு நேரத்தில் வாய்க்கு கிடைத்த விஷயங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் கூரிய விஷ்யம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

சில தினங்களுக்கு முன்னால் என் மேலாளர் தன் பக்கத்து வீட்டு சிறுவனின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருந்தாராம். அந்த சிறுவனின் சுட்டித்தனத்தை தாங்க முடியாத அவனின் தந்தை, அவனை அழைத்து ஓர் இடத்தில் அமைதியாக உட்கார சொல்லியிருக்கிறார். ஆனால் கதை சொன்னால் தான் ஓர் இடத்தில் உட்காருவேன் என்றிருக்கிறான் அந்த சிறுவன். எப்படியாவது அவனை உட்கார வைக்க அந்த தந்தை தொடங்கிய கதை "கிருஷ்ண புராணம்". கதையின் தொடக்கத்திலிருந்தே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் சிறுவன். தந்தையோ மகனின் ஆர்வத்தை பார்த்து கம்சன் செய்த அட்டகாச்ங்கள், கிருஷ்ணரின் தாய் தந்தை பட்ட கஷ்டங்கள் என்று உறுக்கமாக விவரிக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் தந்தையிடம் "அப்பா...கம்சன் யாரால் இறந்துபோவார்" என்று கேட்டான்.

மகன் கதையை மிகவும் ரசிப்பதாக நினைத்த தந்தை "கம்சனின் இறப்பு வசுதேவர், தேவகியின் எட்டாவது மகனால் நேரும்" என்றார். இதைக்கேட்ட மகன் சிரித்துக்கொண்டே தன் தந்தையிடம் "அப்பா, இந்த கம்சனுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை... அதான் வசுதேவர், தேவகியின் எட்டாவது மகனால் தன் சாவு நிச்சயம்னு தெரியுதுல்ல, அப்பறம் ஏன் ரெண்டு பேரையும் ஒரே ஜெயிலிலே போடனும்? இவரே தப்பு செஞ்சிட்டு அப்பறம் குழந்தை பிறந்துடுச்சினா எப்படி"னு கேட்டானே பார்க்கனும். தந்தைக்கு ஒன்னும் புரியவில்லை, எப்படி இந்த நிலமையை சமாளிப்பது என்று தெரியாமல் இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தைக்கேட்ட எனக்கு சிரிப்பையும் ஆச்சரியத்தையும் அடக்கமுடியவில்லை. அந்த சிறுவனின் அறிவு கூர்மையை பாராட்டுவதா? இல்லை நம் புராணத்தில் உள்ள ஓட்டையை சாடுவதா? இல்லை சிறுவனின் வயதுக்கு மீறிய பேச்சை கண்டிப்பதா? என்று தெரியவில்லை. ஆனால் புரியவேண்டயது புரிந்துவிட்டது எனக்கு... உங்களுக்கும் தானே?

-------------------------------------------------------------


No comments:

Post a Comment